தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதன் மூலம் உரிய பலன் கிடைப்பது என்பது உறுதிபடுத்தப்படவில்லை என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை தொடர்பாக நாடு முழுவதும் 39 மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னர், ஐ.சி.எம்.ஆர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளாஸ்மா ரத்தம் கொடுப்பவர்களையும், சிகிச்சை பெறுபவர்களையும் உரிய முறையில், தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே பிளாஸ்மா சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தொற்று ஏற்பட்ட 3 முதல் 7 நாட்களுக்குள் மட்டுமே பிளாஸ்மா வழங்கலாம். தொற்று ஏற்பட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆனால், பிளாஸ்மா வழங்கக்கூடாது. அதேபோல், ரத்தத்தில் ஆன்டிபாடி உருவாகி இருந்தாலும் அவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்க கூடாது என்று ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது.