மத்திய பா.ஜ.க அரசு விளம்பரத்திற்காக ஒரே ஆண்டில் ( 2019-2020) ரூ.713 கோடி செலவிட்டிருப்பதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜதின் தேசாய் என்பவர் 2019-2020ம் ஆண்டில் மத்திய பா.ஜ.க அரசு விளம்பரத்திற்காக செலவிட்ட தொகை குறித்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய அரசு நடப்பாண்டில் விளம்பரத்திற்காக ரூ.713.20 கோடி செலவிட்டுள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1.95 கோடி செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
295.05 கோடி ரூபாய் அச்சு ஊடக விளம்பரங்களுக்கும், 317.05 கோடி ரூபாய் மின்னணு ஊடக விளம்பரங்களுக்கும், 101.10 கோடி ரூபாய் போஸ்டர், பேனர் உள்ளிட்ட திறந்தவெளி விளம்பரத்திற்கும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய பா.ஜ.க ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூபாய் 5,200 கோடி விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலனைக் கைவிட்டு, விளம்பர வெறியால், சமூக வலைதளங்களில் விளம்பர செலவு, தேர்தல் செலவு, பயணச் செலவு என அனைத்திலும் முதலிடம் பிடித்து வருகிறது கார்ப்பரேட் பா.ஜ.க அரசு.
மத்திய அரசின் திட்டங்களை, விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க விளம்பரங்கள் அவசியம்தான். ஆனால் மக்கள் நலத் திட்டங்களை உருவாக்காத பா.ஜ.க அரசு இப்படி, மக்களின் வரிப்பணத்தில் ஆண்டுதோறும் பலநூறு கோடியை வெற்று விளம்பரங்களுக்காக மட்டும் செலவிடுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.