உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராகப் பெருகி வரும் குற்றங்களை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2 நாட்களில் மட்டும் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
மாநிலம் முழுதும் பல்வேறு பாலியல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 23 பேருக்கு விசாரணை நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. மேலும் 31 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருமே பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிற 88 வழக்குகளில் தொடர்புடைய 117 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பீகார் மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட குற்றவாளியை பாட்னா உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது.
சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியது மற்றும் கொலை செய்தது ஆகிய இரண்டு குற்றங்கள் தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் விஞ்ஞானபூர்வமாக இல்லை என்றும், மருத்துவரீதியில் அவை நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி குற்றவாளி அஜித்குமாருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் குற்றவாளியை விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.