நாட்டிலேயே குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் அக்டோபர் 9ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரையில் ஒரே வாரத்தில் 13 பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கொலை என கொடூரங்கள் நடைபெற்றுள்ளன.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தர பிரதேசத்தில் கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை என 13 சம்பவங்கள் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
அதில், நான்கு பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு மாநிலத்தில் கேள்விக் குறியாகியுள்ளது என சாடியுள்ளார். பிரியங்கா காந்தி.
மேலும், ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக கூட்டம் கூட்டும் முதலமைச்சர் யோகி, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்கு நேரம் இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே ஹாத்ரஸில் பட்டியலின பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக தாக்கியதால் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்வலைகளே தணியாத போது மேலும் மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உத்தர பிரதேசத்தில் நடந்தேறி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.