டி.ஆர்.பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்துக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டி.வி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
விளம்பர வருவாயை அதிகரிப்பதற்காக, டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகமாகக் காட்டும் வகையில் வீடுகளுக்கு வழங்கப்படும் செட்ஆப் பாக்ஸில் தகிடுதத்தம் செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங், “டி.ஆர்.பிக்காக பெரிய தொகையை தரகர்களிடம் கொடுத்து தங்கள் சேனலை எல்லா நேரத்திலும் வீடுகளில் ஆன் செய்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏனெனில், ஆங்கிலம் அறியாத சாதாரண குடும்பங்களில் உள்ள தொலைக்காட்சிகளில் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக தரவுகளில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வீடுகளில் செட்டாப் பாக்ஸை இன்ஸ்டால் செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். டி.ஆர்.பி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 சேனல்கள் மீது மும்பை போலிஸ் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.