மத்தியில் ஆளும் மோடி அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் 3 நாட்கள், ”மெகா டிராக்டர் பேரணி” நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பஞ்சாப் மாநிலம், மோகாவில் உள்ள பத்னி கலான் பகுதியில் மிகப் பிரமாண்டமான டிராக்டர் பேரணியை நேற்று தொடங்கி வைத்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
பஞ்சாபின் சங்ருர் மாவட்டத்தியுள்ளவிவசாயிகளுக்கு மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, விவசாயிகளின் விளைபொருளுக்கு பொது விநியோக முறை மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதில் இருக்கும் சிக்கலைச் சரி செய்வதை விடுத்து இந்த மூன்று விவசாய மசோதாக்கள் மூலம் மோடி விவசாயிகளை கொன்று வருவதாக ஆவேசமாகக் கூறினார்.
ராகுல் காந்தி மேலும் கூறுகையில், பிரதமர் மோடி கடந்த ஆறு ஆண்டுகளாக மக்களிடம் பொய்களையே சொல்லிவருவதாகவும் இது ஒரு கைப்பாவை அரசாங்கம் என்றும், மோடி அரசு அதானிகள் மற்றும் அம்பானிகளின் கைகளில் உள்ளது என்றும் கூறினார். மேலும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் கருப்பு சட்டங்கள் எனவும், இந்திய விவசாயத்தின் மூன்று தூண்களை அழிக்க மோடி அரசு விரும்புகிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக நேற்று மோகாவில் ராகுல் காந்தி பேசுகையில், 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் குப்பைத் தொட்டியில் வீசப்படும்' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.