உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார். மேலும் அந்த இளம்பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரது உடலை இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தர பிரதேசம் வந்தனர். உ.பி அரசு ராகுல்காந்தி வருகையையொட்டி அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அப்போது அவர்களின் வாகனம் செல்வதற்கு இடமளிக்காமல் உத்தர பிரதேச காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்தநிலையில், வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நடைபயணமாகவே ராகுல்காந்தியும், பிரியங்காவும் ஹத்ராஸ் கிராமத்திற்குச் செல்லத் தொடங்கினர்.
அப்போது ராகுலின் பின்னால் காங்கிரஸ் தொண்டர்களும் அணிவகுத்துச் சென்றனர். அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். மேலும், காவல்துறையினர் தள்ளியதில் ராகுல் காந்தி தடுமாறி கீழே விழுந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியதாவது: ''உத்தர பிரதேசத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, பாதி வழியில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் தடியடி நடத்தி என்னைத் தரையில் தள்ளினார்கள்”
”இந்திய நாட்டில் சாதாரண மக்கள் நடக்கக் கூடாதா பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க மோடி மட்டுமே சாலையில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டுமா? நடந்து செல்லும் என்னை எதன் அடிப்படையில் தடுத்து நிறுத்துகிறீர்கள்?
எங்கள் வாகனங்கள் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. அதனால்தான் நாங்கள் நடைப்பயணமாக ஹத்ராஸ்க்கு சென்றோம்” என்று ராகுல்காந்தி கூறினார்.
இந்தநிலையில், தடை உத்தரவை மீறி நுழைந்ததாக ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
உ.பி அரசின் இந்த மோசமான செயலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட நாடு முழுவதுமுள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.