வங்கிகடன் கால அவகாசம் வழங்கிய காலத்தில், 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த பதில் மனு தாக்கலில் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், வங்கிகளில் வாங்கிய அனைத்து வகையான கடன் தவணைகளையும் செலுத்துவதற்கு மார்ச் 01ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனை ஏற்று வாடிக்கையாளர்கள் தங்கள் இ.எம்.ஐ தொகையை திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், தவணைத் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆறு மாதங்களுக்கான, அசல் மற்றும் வட்டி தொகைக்கு வட்டி விதிக்கப்பட்டது.
இதனால், கடன் தவணை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தை விட, மேலும் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் நிலை ஏற்பட்டதால், ”வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறை”யை ரத்து செய்யவேண்டும் என பொதுமக்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அரசு முறையான நடவடிக்கையும் உரிய பதிலையும் அளிக்காத நிலையில், சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்றத்தில், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டி விதிப்பதை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்தன.
இதனையடுத்து இந்த மனுக்களை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ்ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி கடந்த விசாரணையின் போது, ”வட்டிக்கு வட்டி முறையை ரத்து செய்ய முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்த மத்திய அரசு, இ.எம்.ஐ கடனை செலுத்தும் கால அவகாசத்தை மேலும், 2 ஆண்டுகள் வரை நீடிக்க தயாராக இருப்பதாக கூறியது.
இதனையடுத்து, ஆகஸ்ட் 31 வரை இ.எம்.ஐ செலுத்தாத வாடிக்கையாளர்களின் கடன்களை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதம் இழந்து வாடும் மக்களிடம் வட்டிக்கு வட்டி விதிப்பது சரியல்ல; மத்திய அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி, இதுதொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நீதிபதிக்கள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, 2 கோடி ரூபாய் வரையிலான கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “வீட்டுக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன், வாகனக்கடனுக்கான தவணைக்கு வட்டி இல்லை. அதேப்போல், சிறு குறு, தொழில் கடன், கிரெடிட் கார்டில் கடன் பெற்றவர்களுக்கு கடன் தொகையில் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை.
எனவே இந்த சலுகை மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களில், கடன் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கு பொருந்தும்” எனத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, எந்தவொரு கடனையும் வாராக்கடனாக அறிவிக்ககூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.