கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வரும் நிலையில், பா.ஜ.க அரசு தொழிலாளர் மசோதா எனும் பெயரில் தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசு, பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணிநேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்திக்கொள்ள கடந்த ஏப்ரல் மாதம் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது.
குஜராத் பா.ஜ.க அரசின் இந்த அரசாணைக்கு எதிராக குஜராத் மஸ்தூர் சபா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், குஜராத் அரசின் வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்திக்கொள்ள அனுமதிக்கும் அரசாணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “கொரோனா பாதிப்பு காலத்தில் தொழிலாளர்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது. இது சரியான நடவடிக்கை அல்ல. வேலைவாய்ப்பு மற்றும் நியாயமான ஊதியத்துக்கான உரிமை என்பது வாழும் உரிமையின் ஒரு பகுதியாகும்.” எனத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்த உ.பி அரசின் உத்தரவு தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், உத்தர பிரதேச பா.ஜ.க அரசு அதனை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.