பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டாம் என குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்றும், விவசாயிகள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பெறுவதை தடுக்கும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டால், அது சட்டமாகிவிடும் என்பதால், குடியரசுத் தலைவர் கையொப்பமிட வேண்டாம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அதன்படி, காங்கிரஸ், தி.மு.க, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் , ராஷ்ட்ரிய ஜனதா தளம், சி.பி.ஐ, சி.சி.ஐ(எம்), தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், பா.ஜ.க அரசு மாநிலங்களவையில் இரு மசோதாக்களையும் நிறைவேற்றிய முறை ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மேலும், இந்த இரு மசோதாக்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிராக உருவாக்கப்பட்டவை, கார்ப்பரேட்களின் கைகளில் விவசாயிகளை அடிமையாகத் தரைவார்த்துவிடும் முயற்சி என்றும் கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.