விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என மோடி அரசு சொல்வது, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வதாகச் சொன்ன வாக்குறுதிக்கு ஒப்பானது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கிடைக்கும் என்பதற்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று அமைச்சர்கள் கூறுகின்றனர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாகவே உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசால் உறுதிப்படுத்த முடியுமென்றால், ஏன் இதுவரை செய்யவில்லை?
நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் நடக்கும் மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை அரசு எப்படி அதனை அறிந்துகொள்ளும்? அரசிடம் தரவு இல்லை என்றால், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை செலுத்தப்படுவதை எவ்வாறு உறுதி செய்யமுடியும்?
மோடி அரசு விவசாயிகளிடம் பொய் சொல்வதையும், தவறான வாக்குறுதிகளை வழங்குவதையும் நிறுத்தவேண்டும். தனியார் பரிவர்த்தனைகளில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதற்கான வாக்குறுதி என்பது, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பா.ஜ.க உறுதியளித்ததற்கு ஒப்பானது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.