கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டிள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி சவுரே, “கொரோனா தொற்றுக்கு எதிராக முன்களத்தில் போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த விவரங்களை மத்திய அரசு பராமரிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிரிழப்பு குறித்தும் அரசு கணக்கிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பா.ஜ.க அரசின் இத்தகைய செயல்பாடு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
பா.ஜ.க அரசின் செயலபாட்டை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், “பாத்திரங்களில் தட்டி ஒலி எழுப்புவது, விளக்கு ஏற்றுவதைவிட, மருத்துவ - சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதை என்பது மிக முக்கியம்.
கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் கொரோனா போர்வீரர்களை மோடி அரசு நோகடித்து அவமானப்படுத்துகிறது தரவுகள் இல்லாத பா.ஜ.க அரசு” எனத் தெரிவித்துள்ளார்.