மத்திய பா/ஜ.க அரசு டெல்லியில் உள்ள குடிசைப் பகுதிகளில் நோட்டீஸ் அளித்து வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் குடிசைகள் இடிக்கப்படும் எனக் குடிசை வாழ் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விஷயம் சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா “டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருடன் இருக்கும்வரை டெல்லியில் உள்ள எந்த ஒரு குடிசை பகுதி வாசியையும் இடம்பெயர வைக்கமுடியாது.” எனத் தெரிவித்துவிட்டு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்களை கிழித்து எறிந்தார்.
மேலும் எந்த ஒரு குடிசையும் இடிக்கப்படாமல் இருப்பதற்கான செயல் திட்டம் ஒன்றை அவர் உருவாக்கி வருவதாகவும் சத்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “அரவிந்த் கெஜ்ரிவால் குடிசை வாழ் பகுதி மக்களுக்காக ஒரு முழு செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறார். இந்த செயல் திட்டம் எந்த ஒரு குடிசையும் இடிக்கப்படாத அளவுக்கு அவற்றைக் காக்கும். மக்களை வீடற்றவர்களாக மாற்றும் பா.ஜ.கவின் திட்டம் வெற்றி பெறாது. தேவை ஏற்பட்டால் நாங்கள் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வீதிகளிலும் இதற்கான போராட்டத்தை ஆம் ஆத்மி நடத்தும் என்றும், சரியான மாற்று ஏற்பாடோ, வேறு வீடோ வழங்காமல் எந்த ஒரு குடிசைப் பகுதி வாழ் மக்களின் வீடும் இடிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.