கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகளை 'கடவுளின் செயல்' என்று கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றுக்கு மனிதன் உருவாக்கிய பேரழிவுக்குக் கடவுளின் மீது பழி போடாதீர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் நிவாரண திட்டம் ஒரு நகைச்சுவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு முன்னாள் நிதியமைச்சராக இப்போதைய நிதியமைச்சருக்கு அவர் வழங்கும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு “கடவுளைக் குற்றம் சொல்லாதீர்கள். சொல்லப்போனால் நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். கடவுள் இந்த நாட்டின் விவசாயிகளை ஆசீர்வதித்துள்ளார். இந்த பெருந்தொற்று ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் இந்த இயற்கை பேரழிவையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவையும் கலந்து பேசுகிறீர்கள்.” என பதிலளித்துள்ளார்.
மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரைவில் சரியாகும் எனத் தெரிவித்துள்ள மூத்த பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியனின் கருத்தை ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தொடர்ந்து இதுபோன்று கூறி வருவதாகவும், ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடைசியாக அவர் எப்போது பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.