ஜி.எஸ்.டி வருவாய் இழப்பில் கொரோனா வைரஸ் தாக்கம் கடவுளின் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதைக் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
கொரோனா தொற்று ஜி.எஸ்.டி வசூலைப் பாதித்துள்ளதாகவும், அதனால் 2.35 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் இது கடவுளின் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ”பெருந்தொற்று ’கடவுளின் செயல்’ என்றால் அதற்கு முன்பாகவே 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய காலகட்டத்தில் பொருளாதாரத்தைத் தவறாக நிர்வாகம் செய்தது இந்தியாவை பாதித்ததை எப்படி விவரிப்பது? கடவுளின் தூதுவராக உள்ள பொருளாதார அமைச்சர் இதற்குப் பதில் அளிப்பாரா?” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
2018-2019 காலகட்டத்தில் இரண்டாம் காலாண்டில் 7.1 சதவீதமாக இருந்த ஜிடிபி 2019-20 காலகட்டத்தில் நான்காம் காலாண்டில் 3.1 சதவீதமாக இருந்தது. 2019-2020 காலகட்டத்தில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 3.1 சதவீத ஜிடிபி வளர்ச்சி என்பது அரசின் நிதி நிர்வாகத்துக்கான சரியாக எடுத்துக்காட்டு எனக் கடந்த மே மாதம் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய ஜி.எஸ்.டி வருவாய்க்கு பதிலாக மத்திய அரசு முன் வைக்கும் திட்டம் என்பது முழுக்க முழுக்க இச்சுமையை மாநிலங்களின் மீது சுமத்துவதாக உள்ளதாகவும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
பல மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஜி.எஸ்.டி பங்கை மத்திய அரசு வழங்காமலேயே இருந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மேலும் சிக்கலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.