இந்தியா

நாடாளுமன்றத்தில் கொரோனா பேரிடர் குறித்து எச்சரித்த எம்.பி வசந்தகுமார் கொரோனாவால் பலி - வைரலாகும் வீடியோ!

கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தில் வசந்தகுமார் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

நாடாளுமன்றத்தில் கொரோனா பேரிடர் குறித்து எச்சரித்த எம்.பி வசந்தகுமார் கொரோனாவால் பலி - வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பியும் வசந்த் அண்ட் கோ உரிமையாளருமான வசந்தகுமார் நேற்று மாலை உயிரிழந்தார்.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், புகழ்பெற்ற தொழிலதிபருமான வசந்தகுமார் எம்.பி., (70) கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது தொகுதியிலும், சென்னையிலும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட நிலையில், வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து வசந்தகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 10ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் கொரோனா பேரிடர் குறித்து எச்சரித்த எம்.பி வசந்தகுமார் கொரோனாவால் பலி - வைரலாகும் வீடியோ!

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் வசந்தகுமார் எம்.பி., மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இன்முகத்திற்கும் - எளிமைக்கும் - தளராத முயற்சிக்கும் இணைபிரியாத சொந்தக்காரர் வசந்தகுமார் என புகழஞ்சலி செலுத்தினார்.

கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே அரசு தடுப்பு நடவடிக்கையில் முழுகவனத்துடன் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வந்தார் எம்.பி வசந்தகுமார். கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தில் வசந்தகுமார் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

நாடாளுமன்றத்தில் கொரோனா பேரிடர் குறித்து எச்சரித்த எம்.பி வசந்தகுமார் கொரோனாவால் பலி - வைரலாகும் வீடியோ!

அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும்.

ஊரடங்கு விதிக்கப்பட்டதன் மூலம் வருமானம் இல்லாமல் மக்கள் கடன்களை திரும்பச் செலுத்துவதில் சிரமம் அடைந்துள்ளனர். அதனால், தனிநபர்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் தங்களது கடன்களை திரும்ப செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.

அதேபோல், தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குறைந்தது 2,000 ரூபாய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தினார்.

அப்போது அவர் தொடர்ந்து பேச முயன்றபோது கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததாக கூறி அடுத்தவரை பேச சபாநாயகர் அனுமதித்தார். தொடர்ந்து தனக்கு நேரம் வழங்கவேண்டும் என கூறி வசந்தகுமார் பேசியபோது சபாநாயகர் அவரது மைக்கை அணைக்கும் படி கூறி அவரது பேச்சை நிறுத்தினார்.

அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய எம்.பி வசந்தகுமாரின் பேச்சை அரசு அலட்சியப் படுத்தியதன் விளைவாக இன்று அவரே கொரோனாவால் பலியாகியுள்ளார் என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories