திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (29-8-2020), கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான (மறைந்த) அ.இரகுமான்கான் அவர்களது திருவுருவப் படத்தினை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.
இந்தக் காணொலிக் கூட்டத்தில் கழகப் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற கழகக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி, தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நே.சிற்றரசு மற்றும் மறைந்த அ.இரகுமான்கான் அவர்களின் குடும்பத்தார் - கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான வசந்தகுமார் அவர்களது மறைவுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பிறகு இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தின் விவரம் வருமாறு:
தீர்மானம்: இன்முகத்திற்கும் - எளிமைக்கும் - தளராத முயற்சிக்கும் இணைபிரியாத சொந்தக்காரர் திரு. வசந்தகுமார் அவர்கள்!
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான திரு. எச். வசந்தகுமார் அவர்களின் திடீர் மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தக் கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
கொரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து கொடூரமாகப் பறித்து விட்டது அதிர்ச்சியளிக்கிறது.
‘இலக்கியச் செல்வர்’ திரு. குமரி அனந்தன் அவர்களின் சகோதரரும், தெலங்கானா மாநில ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் சித்தப்பாவுமான திரு. வசந்தகுமார் அவர்கள் இன்முகத்திற்கும், எளிமைக்கும் இணைபிரியாத சொந்தக்காரர். தொகுதி மக்களின் பாசத்தை - கட்சி வித்தியாசமின்றிப் பெற்றவர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பெற்ற அவர், சென்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று - “மக்கள் பணியே மகேசன் பணி” என்று பாடுபட்டவர்.
“வெற்றிக் கொடிகட்டு” “வெற்றிப் படிக்கட்டு” ஆகிய புத்தகங்களை எழுதி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்டிய பெருந்தகையாளர்.
கடின உழைப்பால் “வசந்த் அண்ட் கோ” என்ற நிறுவனத்தைக் கட்டியெழுப்பி - கடைக்கோடி மக்களின் அன்பைப் பெற்றவர்.
காங்கிரஸ் கட்சிக்காக “வசந்த் டி.வி.”-யைத் தோற்றுவித்து - அரசியல் வேறு - மக்கள் பணி வேறு - வர்த்தகம் வேறு என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு - பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த திரு. வசந்தகுமார் அவர்கள், திருமதி. சோனியா காந்தி அம்மையார் மற்றும் ‘இளம் தலைவர்’ திரு. ராகுல்காந்தி ஆகியோரின் பேரன்பைப் பெற்றவர்.
திரு. வசந்தகுமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்- உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் இந்தக் கூட்டம், தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
பொதுவாழ்வில் இருப்போர் – குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளாக இருப்போர் அனைவருமே தங்களது சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை எச்சரிக்கையோடு முறையாக மேற்கொண்டு - தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து - முகக்கவசமணிந்து, கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டிட வேண்டும் என்று இக்கூட்டம், கட்சி வித்தியாசம் பாராமல் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.