மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பேஸ்புக்கின் மூலம் அதிக விளம்பரம் செய்து பா.ஜ.க தன்னை முன்னிலைப் படுத்துவதாக கூறப்பட்டது.
பா.ஜ.க ஃபேஸ்புக் பக்கங்களில் பல்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றது. அப்படி செயல்படும் பக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனத்திற்கு விளம்பரம் கொடுத்துள்ளது பா.ஜ.க.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த 18 மாதங்களில் அதிக விளம்பரம் கொடுத்த 10 விளம்பரதாரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. வெளியான அந்தப் பட்டியலில் பா.ஜ.க முதல் இடத்தில் உள்ளது.
கடந்த 18 மாதங்களில் ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 4.61 கோடி ரூபாயை பா.ஜ.க செலவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாது பட்டியலில் இடம்பெற்றுள்ள அடுத்ததடுத்த 4 பக்கங்களும் பா.ஜ.கவின் ஆதரவு பக்கங்களாகவும், தொடர்பு பக்கங்களாகவும் உள்ளதும் தெரிவந்துள்ளது.
அதில், My First vote for modi என்ற பக்கம் கடந்த 18 மாதங்களில் ரூ.1.39 கோடிக்கு செலவிட்டுள்ளது. Bharat ke Mann ki Baat என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.2.24 கோடி செலவிட்டுள்ளது. Nation with Namo என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.1.28 கோடியும் செலவிட்டுள்ளது.
மேலும், இந்த 3 விளம்பரதாரர்கள் பா.ஜ.க தேசிய கட்சி அலுவலகத்தின் முகவரியை குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, My First vote for modi, Bharat ke Mann ki Baat ஃபேஸ்புக் பக்கங்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 மாதங்கள் முன்பு தான் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவந்தது.
இதன் மூலம் பா.ஜ.க மற்றும் அதன் தொடர்புடைய 4 ஃபேஸ்புக் பக்கங்களின் விளம்பர செலவு மொத்த விளம்பரத்தில் 64% ஆகும். பா.ஜ.கவினர் முகநூலில் அதிகம் செலவு செய்து மக்களிடையே உண்மையை மூடி மறைப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.