பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் சமூக வலைதளங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள வலதுசாரி இயக்கங்களின் பக்கங்களுக்குச் சார்பாக நடந்து கொள்கிறது என்று சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. முக்கியமாக ஃபேஸ்புக் வலதுசாரி ஆதரவாளர்களின் வெறுப்பை விதைக்கக்கூடிய பதிவுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது என்பதை ஆதாரங்களுடன் முன் வைத்து கேள்வி எழுப்பிய மூத்த பொறியாளர் ஒருவரை ஃபேஸ்புக் பணி நீக்கம் செய்ததது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
அதேபோல இந்தியாவிலும் பா.ஜ.கவை சார்ந்தவர்கள் பதிவிடும் வெறுப்பு பேச்சு மற்றும் ஆட்சேபனைக்குரிய விஷயங்களை ஃபேஸ்புக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது என அமெரிக்காவின் தி வால் ஸ்டிரீட் ஜேர்னல் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.
”வெறுப்பு பேச்சுகளுக்கான ஃபேஸ்புக்கின் விதிகள் இந்திய அரசியலோடு முரண்படுகிறது.” என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் ஒரு ஃபேஸ்புக் நிறுவன செயல் அதிகாரி வரம்பு மீறும் பா.ஜ.க நபர்களைத் தண்டிப்பதன் மூலம் அது இந்தியாவில் ஃபேஸ்புக்கின் வியாபாரத்தைப் பாதிக்கும் எனத் தெரிவித்திருப்பது பதிவாகியுள்ளது.
இந்த கட்டுரையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்ஸும், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை இந்தியாவில் கட்டுப்படுத்துகின்றன.
இந்த இரண்டு இயக்கங்களும் வெறுப்பையும், போலிச் செய்திகளையும் இவற்றின் மூலமாகப் பரப்பி அதன் மூலமாக வாக்காளர்களை தன் வசமாக்குகின்றன. இறுதியாக ஒரு அமெரிக்க ஊடகம் பேஸ்புக் குறித்தான உண்மையை வெளிக்கொண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே ஃபேஸ்புக் வலதுசாரி பக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.