உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை உலகளவில் 120 தடுப்பு மருந்துகள் ஆய்வு கட்டத்தில் உள்ளன. இந்தியாவிலும் பல மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா செனேகா என்ற இந்திய நிறுவனமும் இணைந்து கோவிசீல்டு என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்திருக்கிறது. முதல் கட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகளை மனிதர்களில் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.
இந்த சூழலில், கோவிட் 19 நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடாக இருக்கும் என்றும் அதற்குத் தெளிவாக வரையறுக்கப்பட்ட யுத்தியைப் பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல் “கோவிட் 19 தடுப்பூசியைக் கண்டறியும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். அதற்குச் சரியாக வரையறுக்கப்பட்ட, அனைவருக்குமானதாக நேர்மையான முறையில் கோவிட் 19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் யுத்தியை அணுகவேண்டும். அது அனைவரும் வாங்கக்கூடியதாகவும், அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். இந்திய அரசு இதை உடனடியாக செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் கோவிட் 19 கேஸ்கள் தொடர்ந்து அதிகரிக்கும் வரைபடத்தைச் சுட்டிக்காட்டி அது அச்சம் அளிக்கக்கூடியதாக உள்ளதாக ராகுல் தெரிவித்தார். மேலும் இதைப் பிரதமர் கோவிட் 19 கேஸ்கள் நிலையாக உள்ளன என்று சொல்கிறார் என்றால், மோசமான நிலை எப்படி இருக்கும் என ராகுல் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தியாவின் பொருளாதாரம் சுதந்திர இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் மோசமாகப் போகிறது என இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி சொல்லியுள்ளதைச் சுட்டிக்காட்டியும் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்த்துள்ளார் என்பது செய்தது குறிப்பிடத்தக்கது.