சுதந்திர இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு மிக மோசமாகக் கீழே செல்லப்போகிறது என்று இன்போஸிஸ் நாராயணமூர்த்தி தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போஸிஸின் நிறுவனர் நாராயணமூர்த்தி “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தபட்சம் 5% சதவீதமாவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1947-ம் ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான அளவுக்குக் குறையும் என்ற அச்சமும் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. சர்வதேச வியாபாரம் குறைந்துள்ளது. சர்வதேச பயணம் இல்லாமல் ஆகிவிட்டது. உலக மொத்த உற்பத்தி 5% சதவீதம் முதல் 10% சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைச் சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி “மோடி இருந்தால் அங்கு எதுவும் சாத்தியம்” என்ற பா.ஜ.கவின் 2019 தேர்தல் வாசகத்தைப் பகிர்ந்து கிண்டல் செய்துள்ளார்.
ராகுல் காந்தி மோடி அரசின் பொருளாதார நிலை குறித்தும், சீன தாக்குதல் குறித்தும் தொடர்ந்து ட்வீட் செய்துவருகிறார்.
மேலும் மோடியின் இந்துத்துவா அரசு செய்யும் தவறுகளையும் தொடர்ந்து மக்களுக்குச் சுட்டிக்காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் “பிரதமர் மோடி மற்றும் அவரது குழுவிடம் பொருளாதார நிலைமையைச் சரிசெய்வதற்கான கருவிகள் குறித்த புரிதலும் இல்லை, திறமையும் இல்லை” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.