ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு முதல் நாள் இரவில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மெகபூபா முப்தியை விடுவிப்பது குறித்து எந்த முடிவையும் காஷ்மீர் நிர்வாகம் எடுக்கவில்லை.
இந்நிலையில் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் உள்துறை நிர்வாகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக்காவல் விவகாரத்தில் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி மீதான வீட்டுக்காவல் நடவடிக்கை ஓராண்டுக்கும் மேலாக தொடர்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு :
“காஷ்மீரில், மெகபூபா முப்தி மற்றும் பிற அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு எனது உறுதியான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் குரல்கள் ஒடுக்கப்பட்டும், அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டும் ஓராண்டாகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை தி.மு.க. எதிர்க்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.