கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய பா.ஜ.க அரசு திரும்பப் பெற்றது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதன்பின் இவர்கள் 3 பேரும், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.
நாட்டையே கொந்தளிக்கச் செய்த இந்த நிகழ்வு நடந்து ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பா.ஜ.க அரசு ஒடுக்குமுறையைக் கைவிட்டபாடில்லை. இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், காஷ்மீர் விவகாரத்தில் மற்ற அரசியல் கட்சிகள் வலுவாகக் குரல் கொடுக்கவில்லை என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து பா.ஜ.க-வுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. தி.மு.க மக்களவை உறுப்பினர்கள், காஷ்மீர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் வெடித்தனர்.
தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு பா.ஜ.க அரசின் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கடுமையாக வலியுறுத்தியதோடு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுகுறித்து, உமர் அப்துல்லாவிடம் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தி.மு.க எழுப்பிய குரல் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதையடுத்து, அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட உமர் அப்துல்லா, “தி.மு.க தலைவரும், தி.மு.க-வும் எங்களுக்கு அளித்த உறுதியான ஆதரவுக்கு என்றென்றைக்கும் நன்றி கொண்டிருப்போம்.” என நன்றி தெரிவித்துள்ளார்.