இந்தியாவின் மிகப் பெரும் தொழில் குழுமமான டாடாவின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, கொரோனா பேரிடர் காலத்தில் இந்திய முதலாளிகள் தங்கள் ஊழியர்கள் மீது இரக்கமற்றவர்களாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு கடந்த 4 மாதங்களாக நீடிக்கும் நிலையில், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கண் மூடித்தனமாக வேலையை விட்டு விலகினர். வர்த்தகமில்லை, லாபம் இல்லை என்பதையே காரணமாக சுட்டினர். இதைத் தான் விமர்சித்திருக்கிறார் தொழில் துறை ஜாம்பவான் ரத்தன் டாடா.
அவர் யுவர் ஸ்டோரி என்ற இணையதளத்துக்கு கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது, " இவர்கள் உங்களுக்காக உழைத்தவர்கள். பணிகாலம் முழுவதும் உங்களுக்காக பணி செய்தவர்கள். இப்போது அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டீர்கள். ஊழியர்களை இப்படி நடத்துவது தான் உங்கள் தொழில் தர்மமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டாடா குழுமமும் கொரோனா சூழலால் பாதிக்கப்பட்டிருந்த போதும், அது ஊழியர்களை பணி நீக்கம் செய்யவில்லை. உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டும் 20% ஊதியத்தை குறைத்துள்ளது.
" தன் ஊழியர்களின் நலன் மீது அக்கறை செலுத்தவில்லை என்றால் ஒரு நிறுவனமாக வெற்றியடைய முடியாது. கொரோனா வைரஸ் யாராகினும், எந்த உயரத்தில் இருப்பினும் தாக்கக் கூடும். நீங்கள் எதெல்லாம் சரி, எதெல்லாம் நல்லது என்று நினைக்கிறீர்களோ அதையெல்லாம் மாற்றாவிட்டால் பிழைக்க முடியாது." என்கிறார்.
மேலும் தொடர்ந்த அவர், " எல்லோரும் லாபத்தை நோக்கி ஓடுகின்றனர். ஆனால், அந்த பயணம் எவ்வளவு நெறியானது என்பதை பார்க்க வேண்டும். தொழில் என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்கள் உள்ளிட்ட நிறுவனம் செயல்பட உதவியர்களுக்கும் சரியானதை செய்வதே." என்றார்.
" தவறுகள் நேர்வது தொழிலில் சகஜம் தான். ஆனால், ஒவ்வொரு முறையும் சரியான முடிவை எந்த ஒரு நெருக்கடிகள் நேர்ந்தாலும் எடுக்க வேண்டியது முக்கியம்." என அறிவுறுத்தியும் உள்ளார்.
இந்த கொரோனா காலத்தில் எதை பெரிதும் மிஸ் செய்தீர்கள் என்ற கேள்விக்கு " ஆடம்பரங்களையும், சொகுசுக் கப்பல் பயணங்களையும், உல்லாசங்களையும் அல்ல. நாம் சரி என நினைக்கும் சிந்தனைகளோடு ஒத்த சிந்தனைகள் கொண்டு உறுதியோடு நிற்பவர்களுடன் பேசி மகிழ்வதை தான் இந்த பெருந்தொற்று காலத்தில் இழநந்திருப்பதாக உணர்ந்திருக்கிறேன்" என்று வியக்க வைக்கிறார் ரத்தன் டாடா.