லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உட்பட 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக இந்திய இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் சீன இராணுவ வீரர்கள் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் சீனா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவினர் மற்றும் இந்துத்வா அமைப்பினர் பலரும் சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிப்பதாக கூறியும் சீனப் பொருட்கள் சிலவற்றை சேதப்படுத்தியும் புகைப்படம் வீடியோ ஆகியவற்றைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.கவினர் சில இடங்களில் சீனாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்குவங்கத்தின் அசோன்சோலைப் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க ஆதரவாளர்கள் சிலர், சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு சீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மைக்குப் பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் உருவபொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. முன்னதாக, இதேபோன்று தீபிகா படுகோன் நடித்த ‘பத்மாவத்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு அனுஷ்கா ஷெட்டி நடித்த ‘பாகுமதி’ திரைப்படத்திற்கு திரையரங்கிற்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.