மே 25ம் தேதி முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து தொடங்கப்படவுள்ள நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமானப் போக்குவரத்து சேவை கடந்த 2 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாத சூழலில், பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு உள்ளூர் விமானப் போக்குவரத்து திங்கள் முதல் தொடங்கவுள்ளது.
இதற்கான கட்டண விவரங்களை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது :
“வரும் 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து படிப்படியாக துவக்கப்படும். இதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில், விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து சர்வதேச விமான போக்குவரத்து துவக்கப்படும். விமானத்தில் பயணிப்போர், பாதுகாப்பு பாதுகாப்பு உடை, மாஸ்க் அணிந்திருப்பதுடன், சானிடைசர் பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
பயணிகள் கொரோனாவில் பாதிக்கப்படவில்லை என ஆரோக்கிய சேது செயலி மூலம் உறுதி செய்யப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் பயணிக்க அனுமதி கிடையாது. விமானத்தில் ஒரு பை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும்.
விமான கட்டணங்கள் முறைபடுத்தப்பட்டு இன்று முதல் 24 ஆகஸ்ட் நள்ளிரவு வரை அமலில் இருக்கும். விமான பயணத்திற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்களை மத்திய அரசு வரையறுத்துள்ளது.
அதன்படி, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில், பயண நேரம் 90 முதல் 120 நிமிடங்களாக இருக்கும் நிலையில், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.3,500ம், அதிகபட்ச கட்டணமாக ரூ.10 ஆயிரமும் இருக்கும்.” எனத் தெரிவித்தார்.