கொரோனா நிவாரண நிதியைப் பெறுவதற்காக PM Cares எனும் நிதி அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. PM Cares எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல என்றும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெறலாம் என்றும் சர்ச்சை கிளம்பியது.
PM Cares மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கை இவர்கள் யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது.
இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது எனத் தகவல் வெளியானதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பக்கத்தில், “பிஎம் கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் இருக்கின்றன. வெளிப்படைத்தன்மை இல்லை. ரகசியம் எப்போதும் கெட்ட விஷயங்களுக்கான வழி.” எனப் பதிவிட்டது.
இந்நிலையில், பிரதமரின் PM Cares நிதி தொடர்பாக மக்களிடம் தவறான கருத்துகளை, காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்கள் செய்தி பரப்பியதாக குற்றச்சாட்டின் பெயரில் கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் பிரவீன் என்பவர் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பொதுமக்களை குழப்பி இந்த பேரிடர் காலத்தில் அரசுக்கு எதிராக சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த தகவல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த புகாரின் பேரில், சோனியா காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது கர்நாடக காவல்துறை. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை, சோனியா காந்தி பராமரிப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் அரசை விமர்சித்ததால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. PM Cares குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.