தொழிலாளர்கள் தொழிந்து போனால் முதலாளிகள் நலிந்துபோவார்கள்!
இந்திய அரசியலமைப்பு சட்டம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அதுவே இந்தியாவின் உச்ச சட்டம், அதுவே சாசனம்.
அத்தகைய இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஷரத்துகள் 16,19,23,24 மற்றும் அத்தியாயம் 4 தொழிலாளர்கள் நலன்களும், அவர்களின் சுய மரியாதையையும் காக்கும் சட்டங்களாகும். இந்தச் சட்டங்கள் அடைப்படை உரிமைகள் மற்றும் மாநிலக் கொள்கைகளை வழிநடத்தும் கோட்பாடுகளின் ஒத்ததிர்வு கொண்டவையாகும்.
நம் நாட்டில் தொழிலாளர் நலன்களின் உரிமைக்குரலாக செயல்படும் தொழிற்சங்கங்களின் சாரத்தை பாதுகாக்கும் சட்டங்கள் இருந்தும், இந்த சட்டங்கள் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மூன்று மாநிலங்களில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகியவை தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை தகர்க்க முற்படும் ஒரு கட்டளைச் சட்டத்தை இயற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் அவர்களின் பொருளாதார உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளன. இந்த நடவடிக்கை நமது அரசியலமைப்பால் வகுக்கப்பட்ட சோசலிசக் கொள்கைகளுக்கு எதிரானது.
தொழிற்சங்கவாதம் இந்தியாவிற்கு புதிதல்ல. பிரிட்டிஷ் ராஜ் காலத்திலிருந்தே இந்தியா ஒரு வலுவான தொழிலாளர் இயக்கத்தைக் கொண்டிருந்தது. மேலும் சிங்காரவேலு செட்டி மற்றும் எஸ்.ஏ.டேங்கே போன்ற சிறந்த தலைவர்களின் தலைமையில் நாட்டில் வெற்றிகரமான தொழிலாளர் இயக்கங்கள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த இயக்கங்கள், நாட்டில் தொழிலாளர்களின் நலன்களைப் பேணி பாதுகாக்க வலுவான சட்டங்களை இயற்ற பிரிட்டிஷாரை கட்டாயப்படுத்தின. அந்தக் காலகட்டத்தில், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாதி அமைப்புக்கு எதிராக மட்டுமல்ல, சமத்துவமற்ற வர்க்க அமைப்புக்கு எதிராகவும் சண்டமாருதம் செய்துக்கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இந்தியாவில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்புக்கு அவர் அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். அம்பேத்கர்தான் வாழ்க்கை ஊதியங்கள், ஒழுக்கமான வேலை சூழ்நிலைகள் மற்றும் ஏழை விவசாயிகளை கொடிய முதலாளித்துவ இருள் மண்டிய உள்ளம் கொண்ட நில உரிமையாளர்கள் மற்றும் ஏகாதிபத்திய தொழிலதிபர்களிடமிருந்து விடுவிப்பதற்காக வாதிட்டார்.
உண்மையில், அவர் உருவாக்கிய முதல் அரசியல் அமைப்பு இயக்கம் 1936ல் சுதந்திர தொழிலாளர் கட்சிதான். இதன் மூலம் அவர் நிலமற்ற ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்காக வாதிட்டார், மேலும் அந்த நேரத்தில் நம் நாட்டில் இருந்த முதலாளித்துவ கட்டமைப்புகளையும் எதிர்த்தார்.
1943ல் நிறைவேற்றப்பட்ட சுரங்க மகப்பேறு திருத்த மசோதா (Mines maternity amendment bill) வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சம வேலைக்கு சம ஊதியத்தை நிறுவியது. நமது நாட்டின் தொழிலாளர் இயக்கத்திற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் இது முக்கியமான ஒன்றாகும்.
இந்த சட்டங்ள் இயற்றப்பட்டதால் பிற நன்மைகளும் கிட்டியது. இந்தியாவில் தொழிலாளர் இயக்கங்களின் நலன்கள் மற்றும் அவைகளின் உரிமைகளை பாதுகாக்கும் மேலும் சில மசோதாக்கள் மற்றும் சட்டங்கள் இயற்ற வழிவகுத்தது. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை 1948ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம். அந்த சட்டம்தான், ஒரு தொழிலாளர் வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாது என்று உரிமைக்குரலாக ஒலித்தது.
ஆனால் அண்மையில் உ.பி. அரசாங்கத்தின் கட்டளைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது மீண்டும் அடிமைத்தனத்துக்கு கால்கோள் விழா நடத்துவதுப் போல் உள்ளது.
இது நம் நாட்டை 100 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. இது மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சக்தியின் அடிப்படை உரிமைகளை அரசு கருவறுக்க முடிவு செய்திருக்கிறது. வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாகவும், வாரத்திற்கு 48மணி நேரத்திலிருந்து 72 மணிநேரமாகவும் உயர்த்துவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
ஓட்டுப்போட்டு அரியணையில் அமர்த்திய மக்களையே வஞ்சித்த அரசு தொழிலாளர்கள் நலனில் மட்டும் அக்கறை காட்டுமா என்ன? இந்தச் சட்டத்திருத்தத்திற்கு அரசு தரப்பில் அளித்த விளக்கமும் சரியாக இல்லை.
ஏனெனில் அவர்கள் மீண்டும் மாநிலத்திற்கு குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், தற்போதுள்ள வேலைவாய்ப்பு தேவைகளைப் பாதுகாப்பதாகவும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி கொரோனா ஊரடங்கால் நலிந்துபோன தொழில்களை சீர் செய்ய வேலை நேரம் மட்டும் உற்பத்தித்திறனில் நெகிழ்வுத்தன்மை (flexibility) வேண்டுமாம். அதுவே காலத்தின் தேவையாம். அதுசரி, பொய் சொல்வதும், பித்தலாட்டம் செய்வதும் இவர்களுக்கு கை வந்தக் கலைதானே.
இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொழிலாளர்களின் உழைக்கும் உரிமைகளை கட்டுப்படுத்த முற்படும் இந்த கடுமையான நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்ய பிரதான கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் முடிவு செய்துள்ளன.
தற்போதைய தொழிலாளர் சட்டங்கள் எப்படி பெறப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தொடர் தொழிலாளர் இயக்கங்களின் போராட்டங்கள், பேரணிகள், மற்றும் வர்க்கப் போராட்டங்கள் மூலம் பெறப்பட்டவை.
இத்தகைய வலுவான தொழிலாளர் சட்டங்கள் முதலாளி வர்க்கத்தினருக்கு என்றுமே சிம்ம சொப்பனமாகவே இருந்தது. ஆனால் இன்றோ இதுபோன்ற சட்டத்திருத்தங்கள் மூலம் தொழிலாளர் சட்டங்களை முற்றிலுமாக புறக்கணிப்பது பெரு முதலாளிகளுக்கு குற்றாலக் குதூகலத்தைக் கொடுத்திருக்கும்.
நாடு பொருளாதார நெருக்கடி என்னும் நெருப்பாற்றைக் கடந்து செல்கிறது என்பதும், கொரோனா தொற்றுநோயால் நிலைமை மோசமாகியுள்ளது என்பதும் மறுக்கப்படவில்லை. நிர்வாகத்திறனற்ற இந்த அரசு தொழிலாளர் வர்க்கத்தை பாதுகாக்கத் தவறிவிட்டது. மேலும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து, வேலைக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்றிருக்கும் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு சொந்த மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மத்திய மாநில அரசுகளின் மெத்தனப்போக்கை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கண்ணீர் கடலில் கரைந்துக் கொண்டிருக்கிறார்கள், சொல்லொணாத் துயரத்தில் வியாகூலப்படுகிறார்கள். மேலும் சிலர் தாங்கள் வேலை இடங்களுக்குத் திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இதுபோன்ற தொழிலாளர் நலனைச் சிதைக்கும் சட்டங்கள் பிற மாநிலங்களில் இயற்றப்படுவதால், ஏற்கனவே அதலபாதாளத்திற்கு சென்றுள்ள பொருளாதார நிலைமை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பதே நிதர்சனம்.
எனவே, தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது இத்தகைய தொழிலாளர் சட்ட விலக்குகள் எவ்வாறு பொருளாதார உற்பத்தித்திறனை மேம்படுத்தும் என்பது ஒரு கேள்வி. உண்மையில், இனி குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு விதிமுறைகள், தொழிற்சங்கங்கள் / கூட்டு அமைப்புகள் மற்றும் ஓய்வு நேரத்திற்கு எந்த உரிமையும் இருக்காது. உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கிறது.
இதுவே அடிமைத்தனம். கொத்தடிமைகளாக மக்களை சிதைக்கத் துடிக்கிறார்கள் பெரு முதலாளிகள். அவர்களின் மனதில் வேரூன்றிய கொடிய எண்ணங்கள்தான் இத்தகைய சட்டங்களை அவர்களை ஆதரிக்கச் செய்கிறது.
தொழிலாளர் சட்டங்களை; அவர்கள் உரிமைகளை தடையின்றி தூக்கிப்படிக்க வேண்டியது காலத்தின் தேவை.
தொழிலாளர்களின் நலன்கள்; மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் சலுகைகளை உறுதி செய்வதும் அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் எந்த வகையிலும் மீறப்படாமல் பார்த்துக் கொள்வதும் அரசு நிர்வாகத்தின் தலையாய கடமையாகும்.
சட்டங்கள் வெகுஜன இயக்கங்களின் தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளன, அவற்றை ரத்து செய்வது நமது நாட்டின் முழு தொழிற்சங்க இயக்கங்களையும் புறக்கணிப்பதாகும்.
அதுசரி, அராஜகமான கொடுங்கோல் ஆட்சிதான் அங்கே அரியணையில் வீற்றிருக்கிறது. தொழிலாளர்களின் ரத்தம்தான் வியர்வையாக மண்ணில் விழுகிறது என்பது முதலாளிகளுக்குப் புரியப்போவதில்லை. உபகாரம் செய்பவருக்கே அபகாரம் செய்யத்துடிக்கும் அதிகார நர்த்தனங்கள் அரங்கேரிக்கொண்டிருப்பதை நாடும் நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கருக்கல் நிலைக்குப் பின்னால் அடிவானம் சிவப்பதைப் போல், தொழிலாளர்கள் அடிவயிற்றில் கைவைத்திருக்கிறார்கள், இந்தியா மீண்டும் ஒரு அத்தியாயத்திற்கு தயாராகிறது! என்ன பாடுபடப் போகிறார்கள் நம் ஆட்சியாளர்கள் என்பதை பார்க்கலாம்..!
- அஜெய் வேலு