கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல், வேலையின்றியும், உண்ண உணவின்றியும் தவித்து வருகின்றனர்.
நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்றோரில் நூற்றுக்கணக்கானோர் விபத்திலும், பட்டினிக் கொடுமையாலும், அரசின் பாராமுகத்தாலும் தங்கள் உயிர்களைப் பலிகொடுத்தனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக மக்கள் போற்றும்படி ஒன்றும் செய்யாத பா.ஜ.க அரசு, அவர்களைக் காப்பதாக பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கால் நோக, உயிர் நோக நடக்கிறார்கள்.
இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்க இடம் கொடுக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடைய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பகிர்ந்து, “இது ஒரு கடினமான நேரம். இவர்களின் அலறல் அரசாங்கத்தை சென்றடையும். இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர்; நாட்டின் சுயமரியாதையின் கொடி. அதைத் தாழவிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.