கொரோனா பாதிப்பு உலக அளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மரணங்களின் எண்ணிக்கையும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்துவருவதால் நாட்டு மக்களை ஊரடங்கைத் தீவிரமாக கடைபிடித்துவர மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் தொழிற்சாலை மற்றும் வாகனப்போக்குவரத்து என அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் முழுவதும் இதேநிலைதான் நீடிக்கிறது ஊடரடங்கில் உள்ள மக்கள் வீட்டிற்குள் முடங்கிடக்கும் இந்த சூழலில் அவர்களை உற்சாகமூட்டும் பல நிகழ்வுகள் அங்கேங்கே அரங்கேறுகிறது.
சமீபத்தில் இத்தாலியில் வெனிஸ் நகரின் கால்வாய்ப் பகுதிகளில் நீர்வழிப் போக்குவரத்து குறைவாக இருப்பதால் நீர் தெளிவாக காட்சி அளிக்கிறது. இதனால் நீருக்குள் இருக்கும் வண்ணமயமான மீன்களும் நீரின் மேற்பகுதிக்கு வந்துள்ளன. அதேபோல், நீர்வாழ் உயிரினங்களும் சுதந்திரமாக உலவி வருகின்றன.
பல நாடுகளில் கட்டுப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் நகரங்களுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் ஊரடங்கு காரணமாக வாகனம் தொழிற்சாலை இயக்காததால் காற்றுமாசுபாடு பெருமளவில் குறைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் நைட்ரஜன் டை ஆக்சைடு உமிழ்வு கணிசமாகக் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் எப்போதும் புகைமண்டலமாக காட்சியளிக்கும் டெல்லியில் தற்போது நிலைமைகள் வேறுமாதிரியாக இருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் நமக்கு உணர்த்துக்கின்றது. அதுமட்டுமின்றி, டெல்லி அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் காற்றுமாசுபாடு குறைந்துள்ளதால் 25 ஆண்டுகள் கழித்து தற்போது இமயமலையின் அழகை காண்கின்றனர்.
அதுமட்டுமின்றி கங்கை நதியும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தூய்மை அடைந்துள்ளது. சாலையோர மரங்கள் புள் வெளிகள் என கோடை நெருங்கும் நேரத்திலும் பூத்துக் குழங்கிறது. இந்நிலையில் இந்தியாவில் காற்றுமாசு குறைந்ததால் 20 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவு காற்றுமாசு மதிப்பீடு பதிவாகியுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
அதில், “கடந்த மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதிக்கு இடையான புகைப்படங்களில், வட இந்தியாவில் காணப்படும் காற்றுமாசுவைக் குறிக்கும் ஏரோசோல் அளவு இதுவரை இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது. இது நல்ல செய்தியாக உள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்.