கொரோனா வைரஸ் வானிலை கணிப்பை கடினமாக்கியுள்ளது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் ஃபானி (fani) புயல் உருவாகி, மே மாதம் ஒடிசா கரையைக் கடந்து, வங்காளம் வரை சென்று மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது நாம் அறிந்தது. ஃபானி புயலின் பயணம் பல தனித்துவங்கள் நிரம்பியது.
கடந்த 52 ஆண்டுகளில் இந்திய கரையை 145 புயல்கள் தாக்கியுள்ளன, அவற்றில் ஏப்ரல் மாதத்தில் 5% புயல் மட்டுமே உருவாகியுள்ளது. பொதுவாக வெப்பமண்டல புயல்கள் நான்கு முதல் ஏழு நாட்களில் கரையை கடந்துவிடும்.
ஃபானி புயல் ஏப்ரல் 25 தேதி வாக்கில் பூமத்திய ரேகையின் அருகில் உருவாகி, கிட்டத்தட்ட பத்து நாட்கள் கடலில் வடக்கு நோக்கி பயணித்து மே மாதம் 3-4 தேதி கரையை கடந்து ஒடிசாவையும் வங்கதேசத்தையும் துவம்சம் செய்தது.
புயல்கள் மேற்பரப்பில் பயணப்படும் வேகத்தை பொறுத்தே அவற்றை வகைப்படுத்தல் செய்கிறது இந்திய வானிலை ஆய்வு நிறுவனம். ஃபானி புயல் அதிக நாட்கள் கடலில் பயணித்தால் அதிகமான ஈரப்பதத்தை உள்வாங்கி கரையை கடக்கும் சமயத்திலும் அதன் பிறகும் ஆடித்தீர்த்தது.
இதுவரை எந்த புயலுக்கும் இத்தனை முறை அறிவிக்கைகளை (Bulletins) வெளியிட்டது கிடையாது என்கிறது வானிலை நிறுவனம், ஃபானி புயலுக்கு ஒன்பது அறிவிக்கைகளை வெளியிட்டது.
முதலில் தமிழகத்தின் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட புயல் பிறகு ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடந்தது. நல்லவேளையாக அவ்வளவு தீவிர புயல் தமிழகத்தை தாக்கவில்லை, ஒடிசாவின் பேரிடர் கட்டமைப்புகள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் அந்த மாநிலத்தால் அதை எதிர்க்கொள்ள முடிந்தது. 24 மணி நேரத்தில் 14 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டதால் பெரிய அளவில் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதை படிக்கிறவர்களுக்கு சென்ற ஆண்டு கடந்த ஃபானி புயல் பற்றி இப்போது பேசவேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழலாம். கொரோனா தொற்று இந்தியாவை ஆட்டிவைக்கும் சமயத்தில் ஏற்படக்கூடாதது புயல்தான்.
ஏப்ரல் இறுதி வாரத்தை நெருங்க நெருங்க திகிலில் உறையவேண்டியுள்ளது. காலநிலை மாற்றம் புயல்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தன்மையையும் அதிகரித்துள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே.
கடந்த பல ஆண்டுகளாக நம் நாடு பயன்படுத்திவந்த வழமையான வானிலை அவதானிப்பு கட்டமைப்புகள் (weather forecasting systems) சில ஆண்டுகளுக்கு முன்னர் மேம்படுத்தப்பட்டன. வளிமண்டலத்தின் மேற்பரப்பில் இருந்து விமானங்கள் நிகழ்நேர (ரியல்-time) வெப்பநிலை அளவு, காற்றின் வேகம் ஆகிவற்றை வானிலை அவதானிப்பு கட்டமைப்புகளுக்கு கொடுத்துவந்தன. அதன் மூலம் dyanamic மாதிரிகள் உருவாக்கப்பட்டு, வானிலையை கணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் பறக்கும் விமானங்கள் தரும் இந்த தரவுகள் super computersஇல் உள்ள வானிலை மாதிரிகளில் இணைக்கப்பட்டு, மூன்று தினங்கள் அல்லது சில சமயங்களில் ஒரு வாரத்திற்கு முன்னர் கூட வானிலை அறிவிப்புகள் வெளிவருவதற்கு உதவிபுரிந்தன. டைனமிக் மாதிரிகளுக்கு விமானங்கள் தரும் தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, அவற்றை வைத்து ஆரம்பகட்ட நிலைகளை அறிந்துகொள்ளமுடியும் என்கிறார் புனேயில் உள்ள இந்திய வானிலை நிறுவனத்தின் டி.எஸ்.பாய்.
இப்போது கொரோனா தொற்றால் விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த தரவுகள் கிடைக்காததால் டைனமிக் மாதிரிகளை பயன்படுத்த முடியாது. ஆனாலும் வானிலையைக் கணிப்பது நீண்டகால தரவுகளை கொண்டுதான், அதனால் வழக்கமாகப் பயன்படுத்திவந்த கட்டமைப்புகளைப் பயன்படுத்தி இன்னும் சில தினங்களில் முதல் அறிவிக்கை வெளியாகிவிடும் என்றுள்ளது வானிலை நிறுவனம்.
வழக்கமான தரவுகளை தரக்கூடிய கடல் மிதவைகள், கப்பல்கள், வானிலை நிலையங்கள், ரேடார் கருவிகள் கொடுக்கும் தரவுகளைக் கொண்டு வானிலையை கணக்கீட்டு முன்னறிவிப்புகள் வெளியிடப்படும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
குறிப்பாக எல்-நினோ போன்றவற்றின் தாக்கத்தை கண்காணிப்பு மிதவைகளின் மூலமும், செயற்கைக் கோள்களின் மூலமும் அறிந்துகொள்ள முடியும் என்பதால் தரவுகள் பெறுவதில் பெரிய அளவில் பாதிப்புகள் நம் நாட்டில் இருக்காது.
ஐரோப்பிய நாடுகள் பெரிய அளவில் விமானம் தரக்கூடிய தரவுகளை சார்ந்து இயங்கக்கூடிய சரியான டைனமிக் மாதிரிகளை உருவாக்கிவிட்டதால் அவர்களால் வழக்கமான மாதிரிகளை வைத்து 65% திறனில்தான் செயல்படமுடியும் என்று அறிவித்துள்ளார்கள்.
காலநிலை மாற்றம், கொரோனா போன்றவை எம்மாதிரியான சிக்கல்களை கொண்டுவந்து நிறுத்தும் என்று யாராலும் கணிக்கமுடியாது. சூழலைப் பாதுகாத்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துவதே இதற்கான தீர்வு” எனத் தெரிவித்துள்ளார்.