கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது, தன்னை யாரென்றே அடையாளப்படுத்திக் கொள்ளாமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களின் ஆதரவையும் கவனத்தையும் பெற்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன்.
இவர் கடந்தாண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டபோது, “ஜனநாயக நாட்டில் ஒரு மாநிலத்திற்கே தடைவிதித்திருப்பது ஜனநாயக மீறல் , அரசின் இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானது. மக்களுக்காக குரல் கொடுக்க என்னுடைய அதிகாரம் பயன்படும் என நம்பினேன்.
ஆனால் தற்போது அந்த நம்பிக்கை இல்லை, அதனால்தான் இந்தப் பதவியில் நான் இருக்க விரும்பவில்லை” என தனது பதிவியை ராஜினாமா செய்தார் கண்ணன் கோபிநாதன். கண்ணன் கோபிநாதனின் இந்த முடிவு கேரளா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதனின் செயலை சமூகவலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டினர்.
அதன்பிறகு கேரளாவில் தனது சொந்த ஊரில் அப்பகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளை கண்ணன் கோபிநாதன் செய்துவருகிறார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரளாவில் அரசு செய்யும் உதவிப்பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்க்கொண்டும், நண்பர்களுடன் சேர்ந்து தனியாகவும் சில உதவிகளை செய்துவருகிறார்.
இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து கண்ணன் கோபிநாதனுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், “ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் அவர்களின் ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்பட்டவில்லை. அதனால் தாங்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்” எனக் குரிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இது தொடர்பாக கண்ணன் கோபிநாதன் மத்திய அரசுக்கு அனுப்பிய கடித்தை பகிர்ந்து, நான் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் பணிக்கு மீண்டும் திரும்பும் படி அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் நான் மக்களுக்கு எனது சேவையை முடிந்தவரை செய்கிறேன், செய்வேன். அதனால் நான் இனி எப்போதும் ஐ.ஏ.எஸ் ஆகப்போவதில்லை.
மேலும், எனது பதவியை நான் ராஜினாமா செய்து பல மாதங்களாகிவிட்டது. எனக்கு நன்றாகத் தெரியும் இந்த அரசுக்கு தெரிந்தது எல்லாம் துன்புறுத்துவது மட்டும்தான்; அதனால் அவர்கள் என்னையும் துன்புறுத்த நினைக்கிறார்கள்.
அரசின் இக்கட்டான காலத்தில் உதவி செய்ய நினைக்கிறேன். ஆனால் தற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பொறுப்பேற்கும் எண்ணமில்லை” என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “கொரோனா தடுப்பு பணிக்காக பணியில் சேரும் படி அரசின் கடிதம் வந்துள்ளது. மேலும் அதில் என்னுடைய ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்வதெல்லாம், நான் எனது பணியை கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தேன். அப்போது முதல் எனக்கு அரசு எந்தவித ஊதியமும் வழங்கவில்லை. அதனால் தங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என அவசியம் இல்லை. எனது சேவைக்கு ஐ.ஏ.ஏஸ் என்னும் பெயர் தேவையில்லை; நான் சம்பளமின்றி எனது பணியை சிறப்பாக செய்து வருகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.