சீனாவில் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி தங்கள் மக்களை பாதுகாத்து வருகின்றன. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,288 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேருக்கும், தமிழகத்தில் 571 பேருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 292 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுகாதாரத்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை வைரஸை எதிர்கொள்ளும் அளவிற்கு மோடி அரசிடம் திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லையா என்ற கேள்வியும், சந்தேகமும் பரவலாக எழத் தொடங்கி உள்ளது.