கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு துறை சார்ந்த தொழில்கள் முடங்கியுள்ளன. அதில், விவசாயமும் முக்கிய அங்கம் வகிக்கிறது. அறுவடை முடிந்த காலம் என்பதால், விளைபொருட்களை கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வாழை விவசாயிகளுக்கு உதவும் விதமாக தன்னுடைய தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாழை இலையில் உணவளிக்கும் வழக்கத்தை தொடங்கியிருக்கிறார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா, “ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் பத்மா ராம்நாத் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில், கேன்டீனில் தொழிலாளர்களுக்கு பிளேட்டுகளில் உணவு அளிப்பதற்கு பதில் வாழை இலையைp பயன்படுத்தினால், இந்நேரத்தில் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறப்பானதாக அமையும் என யோசனைக் கூறியிருந்தார்.
அதன்படி, உடனடியாக வாழை இலையைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டதோடு, அதற்கான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் பலர் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்புக்குப் பிறகு விவசாயம் செழித்து வளரும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.