டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் மார்ச் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், அந்த மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் சிலருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைத்து மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களையும், அவர்களோடு இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் இதுகுறித்து பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இதுகுறித்து, “தலிபான் பாணியில் தப்லிக் ஜமாத் குற்றம் செய்துள்ளது. இது அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல. மிக மோசமான குற்றச்செயல். இதனை மன்னிக்கவே முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவும், கடுமையான கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப் படுவதற்கு முன்னர், தற்செயலாக நடந்த இந்தச் சம்பவத்தை தீவிரவாதக் குழுவோடு தொடர்புபடுத்திப் பேசுவதா என அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.