நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி கட்டாயமாக நாட்டும க்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவைக் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
21 நாட்கள் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை யாரும் மீறக்கூடாது என்றும், மதம் சார்ந்த விஷயங்களுக்காகவும் ஒன்று கூடக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
இந்த உத்தரவை பல மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தியுள்ளன. பொது இடங்களுக்கு அவசியமின்றி வரும் பொதுமக்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, தடியடி என போலிஸார் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தியுள்ளனர்.
பிரதமர் அறிவித்த ஊரடங்கிற்கு எதிர்கட்சியினர் கூட முழு ஒத்துழைப்பு அளித்துவரும் நிலையில் பா.ஜ.க.,வில் இருக்கும் முக்கிய தலைவர்களே மோடியின் பேச்சைக் கேட்காமல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதும் கலந்துகொள்வதுமாக உள்ளனர்.
அந்த வகையில் உத்தர பிரதேசத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் ராம் ஜென்ம பூமியில் ராம்லல்லா சிலைக்கான புதிய கோவிலை கட்டி, அங்கு சிலையை மாற்றும் பூஜையை நடத்தியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி வழக்கு தீர்ப்புக்குப் பிறகு அங்கு ராமர் கோயில் கட்டும் பணியை அம்மாநில அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. இந்நிலையில் அயோத்தியில் ராமஜென்ம பூமியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு தற்போது தற்காலிகமாக சிறிய கோயில் ஒன்று கட்டப்பட்டு அங்கு ராம்லல்லா சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை வைக்கும் நிகழ்ச்சியை அம்மாநில அரசு முன்னின்று நடத்தியுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்நிகழ்வில் இன்று கலந்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நாட்டுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு கொண்டுவந்த விதிகளை அதிகாரிகளும் ஆட்சியாளர்களுமே மீறலாமா எனக் கேள்வியெழுப்பி, இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி கண்டிக்கவேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.