உலகின் பல நாடுகளையும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய இந்த நோயால் இதுவரை 9000க்கும் அதிகமான உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த நோய் குறித்து நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி இன்று மக்களிடம் உரையாற்றினார்.
அதில், "இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு பயம் ஏற்படுவது இயல்பு. இதுவரை கொரோனா பாதித்த நாடுகளை கணக்கில் கொண்டு பார்க்கையில், இந்த நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது. இந்தியா அந்த மாற்றங்களை தொடர்ந்து உற்று நோக்கி வருகிறது.
சில நாடுகள் மிக வேகமாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைபடுத்தியுள்ளது. இந்தியா போன்ற வளரும் நாட்டில், 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில், இதுபோன்ற வைரஸ் பரவுவதைத் தடுப்பது சாதாரணமல்ல. இதுப்போன்ற சமயங்களில் இரண்டு நடவடிக்கைகள் மிக முக்கியம்.
அரசு சொல்வதை கேட்பதை நாட்டின் குடிமக்கள் தவறாமல் கடைபிடிக்கவேண்டும். மன திடமும், உறுதியுமே நம்மை இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து காப்பாற்றும். நமது உடல்நிலையை சீராகப் பார்த்துக்கொள்வதே நம்மையும், நம்மைச் சார்ந்தோரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
Social Distancing - மிக முக்கியமான நடவடிக்கை. நமக்கு எதுவும் வராது என்று எண்ணி மார்க்கெட் போன்ற வெளியிடங்களுக்குச் செல்வது உங்களது குடும்பங்களுக்கே ஊறுவிளைவிக்கும். இந்நாட்டின் பிரதமராக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் சில வாரங்களுக்கு யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அரசுப்பணி, சுகாராதரப்பணி, மீடியா பணியில் இருப்பவர்கள் தேவை கருதி பாதுகாப்பாக வெளியில் சென்று வரவும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
வரும் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தேசிய மக்கள் ஊரடங்கு உத்தரவு நாட்டின் நலன் கருதி அமல்படுத்தப்படுகிறது. மாநில அரசுகளும் இதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசின் அனைத்து அமைப்புகளும் மக்களுக்கு இதுகுறித்து அடுத்த இரண்டு நாட்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த ஊரடங்கு உத்தரவு நாட்டுக்கு மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கலாம். ஆனால், இதில் நாம் உறுதியை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அதைப் பொறுத்தே இனி வரும் காலங்களில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவெடுக்கப்படும்.
மக்கள் சேவையில் இருப்பவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதில்லை. சூழல் தற்போது சாதாரணமானதாக இல்லை. மக்கள் பணியில் இருப்பவர்கள் கொரோனாவுக்கும், மக்களுக்கும் இடையில் பணி செய்கிறார்கள், அவர்களுக்கு இந்த நாடு தலை வணங்குகிறது. அவர்களை பாராட்டும் வகையில் 22ம் தேதி மாலை 5 மணிக்கு நாட்டின் குடிமக்கள் அனைவரும் அவரவர் ஜன்னல்களில் நின்று 5 நிமிடங்களுக்கு கைதட்டி உற்சாகப்படுத்த வேண்டும். இது எனது மிக முக்கியமாக வேண்டுகோள். இதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இதுபோன்ற மோசமான காலகட்டங்களில் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையின் பணி மிக முக்கியமானது. அதனால், தேவையில்லாமல் மருத்துவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். அறுவைசிகிச்சைகள் அத்தியாவசியம் இல்லையென்றால் ஒருமாதம் தள்ளிப்போடுங்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய நிதியமைச்சர் தலைமையில் Covid-19 Task Force அமைக்கபப்ட்டுள்ளது. நிலைமை சரியாகும் வரை இவர்கள் அனைத்து தர மக்களிடமும் தொடர்பில் இருந்து தேவையான பணியைச் செய்வார்கள். முக்கியமாக ஏழைகள் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை தொழில்துறையில் இருப்பவர்கள் உறுதிசெய்ய வேண்டும். அவர்களுக்கான ஊதியத்தை கொடுக்க மறுக்க வேண்டாம். அவர்களுக்கும் குடும்பம் உண்டு என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.
பால், உணவு, மருந்துப்பொருட்கள் மிக முக்கியமாக இந்த காலகட்டங்களில் தேவைப்படும். அதனால், கடைகளுக்குச் சென்று வீணாக அனைத்துப் பொருட்களை வாங்குவதை தவிருங்கள். அனைத்து தரப்பினருக்கும் அனைத்து பொருட்களும் தேவையான அளவில் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
இதுபோன்ற சமயங்களில் தேவையில்லாத வதந்திகள் பரவும். அதை நம்பாதீர்கள். இந்த அரசு மக்களுடன் இருக்கிறது, நிச்சயம் உறுதியுடன் செயல்பட்டு இந்த தாக்குதலை முறியடிப்போம். நமது அனைத்து சக்திகளையும் கொரோனா வைரஸை எதிர்த்து சண்டை புரியவைப்போம். உலகின் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவை விரட்ட மக்களும் எங்களுடன் சேர்ந்து கைகோர்க்க வேண்டும். மனித குலம் எத்தனை மகத்தானது என்பதை உணர்த்துவோம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.