சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, இன்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவிவிட்டது. இதனால் தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கு சீனாவை நம்பியிருந்த நாடுகளுக்குத்தான் பாதிப்பு அதிகம். விமானத்துறையும் முடங்கிவிட்டது.
இதன் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இது இன்னும் தீவிரம் அடையலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பாதிப்பு இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே அடி வாங்கி வருகின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர, ஓரிடத்தில் நின்றபாடில்லை. அந்த வகையில், வெள்ளிக்கிழமையன்றும் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டுமே பலத்த அடி வாங்கியுள்ளன.
கடந்த ஜனவரி 20 அன்று 42,273 என்ற உச்ச புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ், மார்ச் 12 அன்று 32, 778 புள்ளிகளுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது 2 மாதங்களில் சுமார் 9 ஆயிரத்து 450 புள்ளிகளை சென்செக்ஸ் இழந்துள்ளது. நிஃப்டியும், இதேபோல வரலாறு காணாத விலை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் வரலாறு காணாத வீழ்ச்சியால் பங்கு விற்பனை 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்படும் சரிவு முதலீட்டாளர்களை அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.