இந்தியா

"YES BANK திவால் ஆனதற்குப் பின்னணியில் நிதி அமைச்சகம்” - சந்தேகம் கிளப்பும் கே.எஸ்.அழகிரி!

இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்வதில் இருந்து எவராலும் காப்பாற்ற முடியாது என தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

"YES BANK திவால் ஆனதற்குப் பின்னணியில் நிதி அமைச்சகம்” - சந்தேகம் கிளப்பும் கே.எஸ்.அழகிரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மோடி அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனில் என்றால், இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்வதில் இருந்து எவராலும் காப்பாற்ற முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், “நரேந்திர மோடி ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே வங்கிக் கொள்ளைகள் தொடர் கதையாக நிகழ்ந்து வருகின்றன. மோடியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கியை ஏமாற்றும் 19 ஆயிரம் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

மேலும், 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றிய 23 நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பித்துப் போகவும் அனுமதித்துள்ளனர். நரேந்திர மோடிக்கு நெருக்கமான குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷியும் சுமார் 26 ஆயிரத்து 306 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போனார்கள்.

பொதுவாக, பொதுத்துறை நிறுவனங்களின் வாராக் கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, வாராக் கடன் ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இதனால், பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படையை சிதைக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யெஸ் வங்கி விவகாரம் இந்திய நிதிச் சேவைத் துறையின் அடித்தளத்தையே தகர்த்துள்ளது.

"YES BANK திவால் ஆனதற்குப் பின்னணியில் நிதி அமைச்சகம்” - சந்தேகம் கிளப்பும் கே.எஸ்.அழகிரி!

கடந்த 2004ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட யெஸ் வங்கி, ஆரம்பத்தில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வந்தது. அதன் காரணமாகவே தனியார் துறை வங்கிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் யெஸ் வங்கி இடம் பெற்றிருந்தது. ஏனைய பொதுத்துறை நிறுவனங்கள் பெரு முதலாளிகளுக்குக் கடனை வாரி இறைத்து வாராக் கடன் என்ற படுகுழியில் விழுந்ததைப் போல யெஸ் வங்கியும் கடனை வாரி இறைத்து படுபாதாளத்தில் விழுந்துள்ளது.

யெஸ் வங்கியின் செயல்பாடுகள் தள்ளாடுவதை முன்னரே கவனித்து உரிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் இந்திய ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தப் பின்னணியில்தான் முன்னெச்சரிக்கையாக திருப்பதி தேவஸ்தானம் யெஸ் வங்கியிலிருந்து தனது முதலீட்டை எடுத்துக்கொண்டது.

யெஸ் வங்கியில் ஏற்பட்ட பிரச்சினை இன்றைக்கு, நேற்று ஏற்பட்டதல்ல. கடந்த மார்ச் 2014 ஆம் ஆண்டில் யெஸ் வங்கி வழங்கிய மொத்தக் கடன் ரூபாய் 55 ஆயிரத்து 633 கோடிதான். ஆனால், அது திடீரென கடந்த மார்ச் 2019 இல் ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரத்து 499 கோடியாக உயர்ந்திருக்கிறது. மோடியின் ஆட்சியில் 5 ஆண்டுகளில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது ஏன்? பண மதிப்பு நீக்கத்தின்போது, மார்ச் 2016ல் கடன் தொகை ரூபாய் 98 ஆயிரத்து 210 கோடியாக இருந்தது. மார்ச் 2019ல் ரூபாய் 2 லட்சத்து 3 ஆயிரத்து 543 கோடியாக எப்படி உயர்ந்தது? ஏன் உயர்ந்தது? இந்தக் கடன் உயர்வுக்கு பின்னால் பா.ஜ.கவின் நிதியமைச்சகம் இருப்பதாக பரவலான சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

"YES BANK திவால் ஆனதற்குப் பின்னணியில் நிதி அமைச்சகம்” - சந்தேகம் கிளப்பும் கே.எஸ்.அழகிரி!

இவை தீவிர பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டிருப்பது தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையாக இருக்கிறது.

ஏற்கெனவே, PMC வங்கி எவ்வித அடமானமும் இன்றி பல்லாயிரம் கோடி ரூபாயை வரம்பு மீறி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்து கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் பாதிப்படைந்தவர்கள் கோடீஸ்வர முதலாளிகள் அல்ல. வங்கியில் முதலீடு செய்த சாமானிய ஏழை, எளிய மக்கள் தான். மருத்துவச் செலவு, மகளின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு குடும்பத் தேவைகளுக்கு வங்கி சேமிப்பை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் PMC மற்றும் YES வங்கி வீழ்ச்சியினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

எனவே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மக்களின் சொத்து. மக்கள் தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைப்புத் தொகையாக வங்கிகளில் வைத்திருந்தனர். அந்த நம்பிக்கை தற்போது தகர்க்கப்பட்டு வருகிறது. மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் மத்திய பா.ஜ.க அரசிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது? மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுகிற வகையில் மத்திய பா.ஜ.க அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்வதில் இருந்து எவராலும் காப்பாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories