இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் வங்கிகளுக்கான வாராக்கடன் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடன் வாங்கிய நிறுவனங்களால் லாபம் ஈட்ட முடியாமல் போயுள்ளது. இதனால், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பல நிதிச்சுமையால் தவித்து வருகிறது. அப்படி மீள்முடியாத சிக்கலில் சிக்கியுள்ளது YES வங்கி.
வராக்கடனால், கடுமையான நிதிச்சிக்கலில் இருக்கும் YES வங்கி தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக நேற்று முந்தைய தினம்அறிவிக்கப்பட்டது. ‘யெஸ் வங்கி’ நிர்வாகத்தை நிர்வகிக்க எஸ்.பி.ஐ முன்னாள் அலுவலர் பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கியின் மூலதனத்தைப் பெருக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீண்டும் பெறுவதற்கு ‘யெஸ் வங்கி’ முழுவதையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருமாத காலத்திற்கு, வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்கமுடியும் என்றும் அறிவித்தது. இதனால் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் யெஸ் வங்கி கொண்டுவரப்பட்டது என அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில் DHFL நிறுவனத்துடன் இணைந்து போலி கணக்குகள் உருவாக்கி சுமார் 12 ஆயிரத்து 733 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடத்தப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து, ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ததோடு அவரைக் கைதும் செய்துள்ளது. மேலும், மார்ச் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்கவும் மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மனைவி பிந்து கபூர், மகள்கள் ராக்கி கபூர், ராதா கபூர் மற்றும் ரோஷினி கபூர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத வகையில் லுக் நோட்டீஸ் விடுத்திருந்தது. இருப்பினும், பிரிட்டிஷ் ஏர்வேஸில் லண்டன் செல்லவிருந்த ராணா கபூரின் மகள் ரோஷினி கபூரை மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.