ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கடல் உணவுகளில் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என FSSAI தலைவர் ஜி.எஸ்.ஜி.அய்யங்கார் தெளிவுபடுத்தியுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களை அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் அரசு திறம்படச் செயல்படவில்லை. இதனால், கொரோனா பரவல் குறித்து பல்வேறு வதந்திகள் உலவி வருகின்றன.
அதில், கோழி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் இருப்பதாக பரவிவரும் வதந்தியும் ஒன்றாகும். இந்த வதந்தியை இந்துத்வா கும்பல் திட்டமிட்டு பரப்பி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தலைவர் ஜி.எஸ்.ஜி.அய்யங்கார்.
அவர் கூறுகையில், “ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கடல் உணவுகளில் இருந்து கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் பரவும் என்பது தவறாக கருத்தாகும். இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.
கோவிட்-19 காய்ச்சலுக்கு காரணமாக கொரோனா வைரஸ், விலங்குகளில் காணப்படும் ஒரு வைரஸ். இது எவ்வாறு பரவியது என்பதை கண்டறியும் பணியை நாம் விஞ்ஞானிகளிடம் விட்டுவிடுவோம்.
நமது நாடு வெப்பமண்டல நாடு. நாட்டில் வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் வரை உயரும்போது எந்த வைரஸும் உயிர்வாழ முடியாது. எனவே குளிர்காலம் முடிந்து வெப்பநிலை உயரவேண்டும்.
இதற்கு முன் பறவைக் காய்ச்சல் மற்றும் எபோலா வைரஸ் தாக்குதலை நாம் சிறப்பாக கையாண்டுள்ளோம். கோவிட்-19 காய்ச்சலையும் நாம் கையாளமுடியும். என்றாலும் அதற்கு சிறிது காலம் பிடிக்கும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.