உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் அது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை இந்தியாவில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை எட்டியுள்ளது. அதுபோல உலகளவில் 3 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் மக்கள் பெருமளவில் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். சீனா உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த திணறி வருகிறது.
உலக சுகாதார மையமோ சர்வதேச மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி அவ்வப்போது மக்களுக்கான எச்சரிக்கைகளையும், அறிவுறுத்தல்களை கொடுத்து வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதற்காக தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை சமூக வலைதளங்கள் மூலம் கொண்டு சேர்த்து வருகிறது.
கொரோனா தொடர்பான் வதந்திகளை நம்ப வேண்டாம் என எடுத்துரைப்பதற்காக உலக சுகாதார மையம் அண்மையில் டிக் டாக் சமூக வலைதளத்தில் இணைந்து மக்களுக்கு கொரோனா குறித்த உண்மையை விளக்கி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ள உலக சுகாதார மையம் தற்போது கரன்சி நோட்டுகள் மூலம் வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதாக புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, அழுக்குப்படிந்த கரன்சி நோட்டுகளையோ, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் பயன்படுத்தும் பணத்தை பரிமாற்றிக் கொள்வதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதால் ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பணமாகவோ, நாணயமாகவோ பயன்படுத்திய உடன் கைகளை சோப்போ அல்லது சானிடைசர் உபயோகித்து நன்றாக கழுவிட வேண்டும். பணத்தை தொட்ட கைகளால் முகங்களையோ சுவாச பகுதியையோ தொடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய பொருட்களை தொடும் போதும் அதீத கவனத்துடனேயே செயல்பட வேண்டும் எனவும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.