உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் தற்போது இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் என்ற கோவிட்-19 தொற்று நோயால் உலகின் 60 நாடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் பாதிப்பால் அவதியுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவை குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மூவர் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், இந்தியாவில் மேலும் இருவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இத்தாலியில் இருந்து டெல்லிக்கு திரும்பிய ஒருவருக்கும், துபாயில் இருந்து திரும்பிய தெலங்கானாவைச் சேர்ந்தவருக்கும் கோவிட்-19 பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே சீனாவுடனான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது மேலும் இருவருக்கு நோய்த்தொற்று இருப்பதால் இதர நாடுகளுக்கான விமான போக்குவரத்தையும் தடை செய்வதற்கான ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.
இதுவரை 21 விமான நிலையங்கள், 12 பெரிய துறைமுகங்கள், 65 சிறிய துறைமுகங்கள் என 5 லட்சத்துக்கும் மேலான பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு குறித்த பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தவித்து வரும் நிலையில், இந்தியவுக்குள் மீண்டும் கொரோனா வைரஸ் ஊடுருவி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா தொற்றைத் தடுக்க மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது எனும் கேள்வியும் எழுந்துள்ளது.