உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிலவியபோது, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் கபீல் கான்.
ஆனால், உத்தர பிரதேச பா.ஜ.க அரசு, தனது தவறை மறைப்பதற்கு, மருத்துவர் கபீல்கான் மீதே பழியைத் தூக்கிப் போட்டது. அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், கபீல் கான் தற்போது விடுதலையானார். விடுதலையானதில் இருந்து மத்திய அரசின் மோசமான திட்டங்களுக்கு எதிராக தனது குரலைப் பதிவு செய்து வருகிறார்.
அந்தவகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில், மருத்துவர் கபீல் கான் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார் என்று கூறி, அவரை உத்தர பிரதேச போலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
சட்டப்பிரிவு 153-வின் கீழ் (இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக) அலிகார் சிவில் லைன் காவல்நிலையத்தில் கடந்த டிசம்பர் 13-ம் தேதியே கபீல்கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு 40 நாட்கள் கழித்து மும்பையில் நடைபெறும் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற கபீல் கானைப் பின்தொடர்ந்த போலிஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறையில் அவரைக் கொல்ல வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை அவரது மனைவி ஷமிஸ்தான் கான் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கபீல் கான்னுக்கு ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கபீல் கானுக்கு ஜாமின் வழங்கினார்கள். ஆனால் மதுரா காவலர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி விடுவிக்க மறுத்துவிட்டனர். இதனால் கபீல் கானை பா.ஜ.க அரசு திட்டமிட்டு பழிவாங்குகிறது என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் இதுதொடர்பாக கபீல் கானின் மனைவி கூறுகையில், மதுரா சிறையில் இருக்கும் எனது கணவரை சந்தித்துப் பேசினேன். சிறையில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்தது. அவருக்கு மனரீதியாக கடும் சித்திரவதை கொடுக்கப்படுகிறது. சிறைக்கு அழைத்துச் சென்ற முதல் 5 நாட்கள் அவருக்கு உணவளிக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
சிறையிலேயே அவரை கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் என் கணவரின் பாதுகாப்பை உறுதிசெய்ய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்குக் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.