உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிலவியபோது, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் கபீல் கான்.
ஆனால், உத்தர பிரதேச பா.ஜ.க அரசு, தனது தவறை மறைப்பதற்கு, மருத்துவர் கபீல்கான் மீதே பழியைத் தூக்கிப் போட்டது. அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், கபீல் கான் தற்போது விடுதலையானார். விடுதலையானதில் இருந்து மத்திய அரசின் மோசமான திட்டத்திற்கு எதிராக தனது குரலைப் பதிவு செய்து வருகிறார்.
அந்தவகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில், மருத்துவர் கபீல் கான் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார் என்று கூறி, அவரை உத்தர பிரதேச போலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
சட்டப்பிரிவு 153-வின் கீழ் (இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக) அலிகார் சிவில் லைன் காவல்நிலையத்தில் கடந்த டிசம்பர் 13-ம் தேதியே கபீல்கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 40 நாட்கள் கழித்து, அதுவும் கபீல் கான் மும்பையில் நடைபெறும் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த இடத்தில், பின்தொடர்ந்து வந்து போலிஸார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை ஒடுக்கும் நோக்கில் மத்திய அரசு இதுபோன்ற அராஜக போக்கை கையாளுவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.