குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முதன்முதலாக மாணவர் போராட்டத்தைத் தொடங்கியதே ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தான்.
இந்தப் போராட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய அரசு போலிஸார் மூலம் வன்முறையைத் தூண்டி மிகப்பெரிய மோதலை உண்டாக்கியது. அப்போது டெல்லி போலிஸார் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி மாணவர்களை கலைத்த போலிஸார் பல மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பல்கலைக்கழகம் சமீபத்தில் தான் மீண்டும் திறக்கப்பட்டது.
பல்கலைக்கழகம் திறக்கப்பட்டத்தில் இருந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்றும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பிவந்தனர். அப்போது போராட்டத்தில் புகுந்த இந்துத்வா ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கியை ஏந்தி மிரட்டியபடியே போராட்டக்காரர்களை அச்சுறுத்தினார்.
மாணவர்கள் ஆசாதி முழக்கம் எழுப்பியபோது ஆத்திரமடைந்த அந்த நபர் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்துப் போராட்டக்காரர்களை நோக்கிச் சுட்டார்.
இதில் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தோட்டா, மாணவர் ஒருவர் கையில் பாய்ந்தது. உடனே அருகில் இருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சுட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டவரே போலிஸார் அருகில் வரும் வரை பொறுமைக்காத்த போலிஸார், அவரைப் பிடித்து கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.