அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவியுடன் வருகிற பிப்ரவரி மாதம் 24,25 ஆகிய தேதிகளில் இந்தியா வரவுள்ளார். அப்போது, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்க்கவுள்ளார்.
முதலில் அகமதாபாத்திற்கு வரவிருக்கும் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், முன்னேற்பாடுகள், தூய்மை பணிகள், சாலையை அழகுப்படுத்தும் பணிகள் என பல்வேறு பணிகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ரூ.100 கோடி செலவிடப்படவுள்ளதாகவும், அதில் சிறு பகுதி மத்திய அரசும், மீதியை மாநில அரசும் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆச்சர்யமும், அதிசயமும் என்னவெனில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெறும் 3 மணிநேரம் மட்டுமே அகமதாபாத்தில் தங்கவுள்ளார்.
அதற்காக 80 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை, சேதமடைந்த சாலையை சீரமைத்தல், மோடி-ட்ரம்ப் பயணிக்கும் பாதையில் நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு 4 கோடி ரூபாய், சாலைகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு சுமார் 6 கோடி ரூபாயும், பாதுகாப்பு பணிக்காக 15 கோடி ரூபாயும், விருந்தினர்களின் போக்குவரத்து, தங்கும் வசதிக்கு சுமார் 7-10 கோடியும் செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ட்ரம்ப் கடந்து செல்லும் சாலைகளின் ஓரத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகள் அவர் கண்களில் பட்டுவிடாமல் இருக்க, மிகப்பெரிய சுற்றுச்சுவர் ஒன்றையும் மாநில அரசு கட்டி வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் நிலையில், மூன்று மணி நேரத்துக்காக 100 கோடி ரூபாய் செலவு செய்யும் இந்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.