அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரசு முறைப் பயணமாக வருகிற பிப்ரவரி 24, 25 ஆகிய இரு நாட்களுக்கு தனது மனைவியுடன் இந்தியா வருகிறார்.
அப்போது, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப்பார்க்க உள்ளார். அதன் காரணமாக அங்கு தற்போதிலிருந்தே கெடுபிடிகள் பலபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ட்ரம்ப் வருகைக்காக அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்துக்கு அருகே இருக்கும் குடிசைவாரிய குடியிருப்பு பகுதிகளை மறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து காந்திநகர் வழியாக ட்ரம்ப் செல்லும் அரைகிலோ மீட்டர் தொலைவு வரையுள்ள குடியிருப்பு பகுதிகளை மறைப்பதற்காக சுமார் 7 அடிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அகமதாபாத் மாநகராட்சி மேயரிடம் விசாரித்தபோது எதுவும் தெரியாது என கூறியிருக்கிறார்.
இந்தியாவில் ஏழை மக்கள் இருப்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக நாட்டு மக்களை ஒதுக்கி வைக்கும் வகையில் இவ்வாறு மோடி அரசு செயல்பட்டு வருவதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகை தந்த போதும் இவ்வாறு மாநிலத்தில் உள்ள எடப்பாடி அரசும், மோடி அரசும் தொழிலாளர்களின் வியாபாரத்தை கெடுத்து மக்களை வீட்டுக்குள்ளேயே அடங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.