ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள கோண்ட் மற்றும் முண்டா பாதாவில் உள்ள வனப்பகுதியில் 4,000 ஏக்கர் பரப்பளவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. அந்த நிலக்கரி சுரங்கத்தை அதானி குழுமம் நடத்தவுள்ளது.
இந்நிலையில் 4,000 ஏக்கரில் 54% நிலம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனத்தில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை அழித்து நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அப்பகுதியைச் சுற்றியுள்ள பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக எங்களை இங்கிருந்து கடத்துகிறார்கள். இந்தச் சுரங்கம் அமைக்கப்படுவதால் 7 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 10 ஆயிரத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவார்கள். இயற்கையை அழித்துத் தான் அரசு லாபம் சம்பாதிக்கவேண்டுமா?
2012-ம் ஆண்டு முதல் வனத்தைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் இந்த முறை நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியும் அவர்கள் பணியை தீவிரப்படுத்தத் துவங்கியுள்ளனர். கடந்த மூன்று தலைமுறையாக பாதுகாத்து வந்த காடுகளை அரசு அழிக்கிறது.
அதுமட்டுமின்றி சுரங்கம் அமைக்கக்கூடாது என கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், மாவட்ட அதிகாரிகளே நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதாக போலியாக தீர்மானத்தை தயார் செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்தார்.