ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பிடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான கேஸ் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கேஸ் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் கிணறு ஒன்று அமைத்தது.
அந்தக் கிணற்றில் கேஸ் எடுக்கும் பணியை மத்திய அரசு மூலம் கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேஸ் மையத்தை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உப்பிடி கிராமத்தில் விவசாய நிலங்களில் செல்லும் கேஸ் பைப் லைனில் கசிவு ஏற்பட்டு தீடிரென வெடித்துள்ளது. இந்தச் சம்பவத்தின்போது பயங்கர சத்தத்துடன் பைப் லைனில் இருந்து வெளியேறும் வாயுவை நிறுத்த ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் உப்பிடி கிராமத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், மின்சாரம் மற்றும் செல்போன் இணைப்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பைப்லைன் முறையாக பராமரிக்கப்படாததே இதற்குக் காரணம் எனவும் இதுபோன்ற கேஸ் கசிவு ஏற்படுவதால் எந்த நேரத்தில் எங்கு கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் புதிதாக கேஸ் எடுக்க ஓ.என்.ஜி.சி அனுமதி வாங்கி பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், ஆந்திராவில் நடந்த இதுபோன்ற அசம்பாவித சம்பவம் இங்கு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் டெல்டா மக்கள் அச்சமடைந்துள்ளனர்.